Friday, December 25, 2009

அத்தனைக்கும் ஆசைப்படு !!

பல நேரங்களில்
இதனால் ஏமாற்றமே
ஆனாலும்
எவரும் நிறுத்துவதில்லை
ஆசைப்படுவதை!!
சில சந்தர்ப்பத்தில்
சந்தோஷம் தந்து
வாழ்வை
வாழுதற்கு உந்துவதால்
அது தவறும் இல்லை!
வாழ்வின்
கடைசி நொடி வரை
இது எவரையும்
விடுவதில்லை!!
இந்த உந்துதல்
இல்லையேல்
மனிதனே இல்லை!!
எனவே...
அத்தனைக்கும் ஆசைப்படு!!

Saturday, October 10, 2009

பசலை நோய்!!

நிலவும் நானும்
ஒன்றாய் கரைய
முனைந்ததில்
நிலவு கரைந்து
பின் வளரவும்
தொடங்கி விட்டது
நான் தேய்வது மட்டும்
நிற்கவில்லை!!

Saturday, September 5, 2009

மழை!!

வானக் காதலனை
பிரிந்து செல்லும்
ஒரு மேகத்தின்
அழுகை சிதறல்!!

Friday, August 28, 2009

பிடித்த விஷயங்கள்!!

எனக்கு பிடித்த மூன்று விஷயங்களைப் பற்றி எழுதலாமே என்று ஒரு எண்ணம். அந்த எண்ணத்துக்கு வண்ணம் கொடுத்து இருக்கிறேன். அவை கீழ்க் கண்டவாறு!!

பாட்டி வீடு:

சின்ன வயசுலயும் சரி இப்பவும் சரி ஊருக்கு போறதுன்னா தனி சந்தோஷம். அதுவே பரிட்சை லீவுல பாட்டி ஊருக்கு போறதுன்னா தனி குஷி!! ஒவ்வொரு லீவுக்கும் தவறாம நானும் என் பெரியம்மா பொண்ணு சுதாவும் போவோம்.

வசதி கம்மியா இருந்தாலும், அங்க இருக்கற ஒவ்வொரு நாளும் அவ்ளோ சந்தொஷமா இருக்கும். நாள் முழுக்க சித்தி கூடயே சுத்திகிட்டு இருப்போம். ராத்திரி தூங்கும் போது தினம் ஒரு புது கதை சொல்லுவாங்க. பகல்-ல எங்க தோட்டத்துக்கு போவோம். மணிக்கணக்கா பம்ப் செட்-ல ஆட்டம். குறைஞ்சது 2 - 3 மணி நேரம் நாங்க போடற ஆட்டதுல பம்ப் செட்-ல இருந்து வெளிய வந்ததுமே பயங்கரமான ஒரு பசி எடுக்கும். அங்கயே சாப்பாடு கொண்டு போயி தோட்டத்துல இருக்கற தேக்கு மர இலையிலையோ ஆமனக்கு செடியோட இலையிலையோ சாப்பாட சாப்பிட்டுட்டு வருவோம்.

அப்பப்போ தோட்டத்துல வேலையும் செய்வோம். களை எடுக்கறது, மிளகாய் பழம் பரிக்கறது, பருத்து எடுக்கறது இப்டி. ஊர் திருவிழா-னா கேக்கவே வேண்டாம். எல்லா சொந்தக்காரங்கலும் வருவாங்க. ஒரே ஆட்டம் தான். எல்லாமே இப்போ மலரும் நினைவா மாறிடுச்சு... ஆனா இன்னைக்கும் அந்த நாட்களை நினைக்கும் போது புன்னகையின் கீற்று முகத்தில் தோன்றி மறையுது.

மொட்டை மாடி:

சின்ன வயசுல இருந்து ஒரு 4,5 வீடு மாறி இருக்கோம் குடி இருக்க. எல்லா வீட்டை வச்சும் தனித் தனியா நிறைய நினைவிகள் பின்னி இருக்கும். எல்லா வீட்டுக்கும் இருக்கற ஒரு ஒற்றுமை மொட்டை மாடி.

வெயில் நிறைந்த காலையோ, மந்தகாசமான மாலையோ, அந்தகாரமான இரவோ... எதையுமே பார்க்காம அங்க உக்கர்ந்து மணிக்கணக்கா விளையாடி இருக்கோம் சின்ன வயசுல.

கொஞ்சம் வளர்ந்து 10-த் படிக்கும் போது எல்லாம், வீட்டுக்கு சொந்தக்காரங்க எல்லாம் வந்திருந்தாங்கன்னா, எல்லாரும் சேர்ந்து மொட்டை மாடியில தான் படுப்போம் ராத்திரி. 12 மணி, 1 மணி வரைக்கும் உக்கார்ந்து அப்பா,அம்மா, சித்தப்பா, சித்தி னு எல்லாரும் சேர்ந்து சீட்டு விளையாடி இருக்கோம்.

பௌர்ணமி அன்று மொட்டை மாடியில படுத்துக்கிட்டு நிலாவ ரசிக்கிறது ஒரு தனி சுகம்!! அங்க ஒரு மௌன பரிமாற்றமே நடக்கும் நமக்கும் நிலவுக்கும் இடையில.

கடற்கரை:

இது நான் கடந்த 4 வருடங்களாக அனுபவித்து வரும் சுகம்!! சின்ன வயசுல ஒரே ஒரு தடவை சென்னைக்கு வந்திருக்கேன்.1994-ல னு நினைக்கிறேன். அந்த அனுபவம் வாய்த்ததுக்கு நான் ஜெயலலிதா அவர்களுக்கு தான் நன்றி சொல்லனும். அப்போ அவங்க பண்ண ஏதோ ஒரு அறிவிப்புக்கு எதிரா தான் பந்த் நடந்தது. ஒரு 4 நாள் லீவும் கிடைச்சது. அந்த தடவை நாங்க மெரினா கடற்கரைக்கு போயிருந்தோம்.

அப்பறம் வேலை நிமித்தம் சென்னை வந்ததால அப்பப்ப கடற்கரை பக்கம் தலைய காட்டுவோம் ஆரம்பத்துல. இப்போ கொஞ்ச நாளா நல்லாவே ஊரு சுத்த ஆரம்பிச்சிருக்கோம்(ஹி..ஹி..ஹி எப்பவுமே அப்டி தான் ஆனாலும் சமீபகாலமா கொஞ்சம் ஒவரா தான் இருக்கோ-னு ஒரு டௌட்டு...)

இப்டி சுத்தற சில பல இடங்கள்ல எனக்கு ரொம்ப பிடிச்சது கடற்கரை. சாயங்கால வேளையில கடற்கரையில உட்கார்ந்து பேச ஆரம்பிச்சா நேரம் போறதே தெரியாது. அதுவே பௌர்ணமி அன்னிக்கி-னா பேச்சு துணைக்கு ஆளே இல்லைன்னாலும் தனியா உக்காந்து நிலாவைப் பாத்துக்கிட்டு இருக்கறதே தனி சுகம்!!!

Thursday, August 20, 2009

ஆனாலும் புடிச்சிருக்கு..

தெரிந்தே தவறு செய்துவிட்டு
அப்பாவி போல நான் நிற்பது
தெரிந்ததே இருந்தாலும்
அப்பாவுக்கு முன் கண்டித்து
அவர் அறியாமல் கண் சிமிட்டும்
உன் அன்பை நினைக்கையில்
கண்கள் கலங்கும்!!
ஆனாலும் பிடிச்சிருக்கு...